எல்லை மீறினால்த் தொல்லை !!!!
எல்லை மீறுதல்
எப்போதுமே தொல்லை மட்டுமல்ல
துயரமும் கூட ….
எல்லைகளை மீறி எவரும்
தொல்லைகளைக்
கொடுத்தலை எல்லோரும்
எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை
தொல்லைகளைத் தவிர்க்க
எல்லை மீறி அவர்களும்
தொல்லைகளோடு துயரங்களையும்
கொடுப்பார்கள் ….
எல்லை மீறிக் கடலில்
குப்பைகளைக் கொட்டித்
தொல்லை கொடுத்த மனிதனுக்கு
நல்ல பாடம் சொல்ல
எண்ணி வெளிக்கிட்ட கடல்
தன் எல்லை கடந்து
சுனாமியாய் இறங்கி ஊருக்குள்
வந்து தன் வயிற்றில் சுமந்திருந்த
குப்பைகளை மீண்டும் மனிதனின்
முகத்தில் துப்பி விட்டுப் போனது ….
துப்பிய வேகத்தில்
ஆணவம் உட்பட மனிதனின்
அத்தனையும் அழிந்தது….
கால்களைக் கழுவி நனைத்து
இடை இடையே வந்து
தடவித் தடவிக் கரைகிடக்கும்
கால்த்தடங்களை மட்டுமே
கரைக்கு அடங்கிய
கடலுக்கு அழிக்கத்தெரியும்
என்று எண்ணிய மனிதன்
கடல் நினைத்தால் பொறுமை
கடந்து பொங்கிக்கரை கடந்தால்
தடங்களை மட்டுமல்ல
இடங்களைக் கூட இல்லாமல் செய்யும் என்பதை அறிந்து கொண்டான் …..
எல்லை மீறித் தொல்லை
கொடுத்தால் இழப்புகள் தங்கள்
கொல்லைகளில் குடியேறும் என்பதை
எல்லை மீறுவோர் தங்கள்
எண்ணங்களில் கொள்ள வேண்டும் …..
—காரைக்கவி—