இராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என்றும் அத்துடன், திட்டமிட்டபடி புத்தாண்டு தினத்தன்று தங்கச்சிமடத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வாரம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களது 10 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (26) மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், இராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யும் வரை தொடரும் எனவும், திட்டமிட்டபடி எதிர்வரும் 1ஆம் திகதி மாலை 5 மணிக்கு தங்கச்சிமடத்தில் புகையிரத மறியல் போராட்டம் இடம்பெறும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.