இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் காலியாக உள்ள குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள சமீபத்திய விரிவான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நான்கு வருட விரிவான நிதியளிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வைத் தொடர்ந்து IMF Country Report 24/161 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இத்தகைய வரியை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கு இவ்வாறான வரியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்கிடப்படும் வாடகை வருமான வரி என்பது ஒரு வீட்டின் உரிமையாளர் வீடொன்றை வாடகைக்கு விட்டிருந்தால் அவர் பெறும் வருமானத்தினை மதிப்பிட்டு அதற்கு அறவிடப்படும் வரியாகும். இந்த வரி வீட்டின் மதிப்பின் அடிப்படையில் அல்ல, ஆனால் அதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தின் அடிப்படையிலாகும்.
இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மட்டத்தில் தரவுக்களஞ்சியம் ஒன்றை நிறுவுவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனவும், நாட்டிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டை தரவுக் களஞ்சியத்தில் உள்ளடக்கியிருக்க வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் தரவுக் களஞ்சியத்தை உருவாக்கும் பணியை முடிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சொத்து வரி மற்றும் பரிசு மற்றும் பரம்பரை வரி முறையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், புதிய ‘கட்டண வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.