இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான 18 மீனவர்களும் மீன்பிடிக்கு பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டதோடு, 18 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, படகுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.