அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி தொடர்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம் என மருதானை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித், அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 09 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாளை(18) முற்பகல் 11 மணி வரை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணியை நடத்த இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, குலரத்ன மாவத்தை, ஒராபி பாஷா மாவத்தை, சங்கராஜ மாவத்தை, டீன்ஸ் வீதி, டார்லி வீதி, வைத்தியசாலை சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த வீதிகள் மற்றும் நடைபாதையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணியை நடத்த தடை நீதிமன்றம் விதித்துள்ளது.