தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பள்ளிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் ஊடக சந்திப்பு இன்று (26) இடம்பெற்றது.
இவ் ஊடக சந்திப்பில் கெளதாரி முனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ச.கணேச மூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில்
“கல்முனையிலிருந்து பள்ளிக்குடா வரை காற்றாலை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது . குறுகிய நிலப்பரப்பு மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதனால் காற்றாலை பொருத்த பொருத்தமற்ற பிரதேசமாகும்.
இந்நடவடிக்கையால் கெளதாரி முனை மீனவர்கள் மாத்திரமல்ல யாழ்மாவட்ட மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் காற்றாலை பொருத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்ற போது அதனை எதிர்த்தோம்” என்றார்.
தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பள்ளிக்குடா கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர்
செ.டசின் கனிடஸ் கருத்து தெரிவிக்கையில்,
“பள்ளிக்குடா கிராமமும் காற்றாலை பொருத்தப்பட்டிருப்பதனால் பாதிக்கப்படுவதுடன் கரையோர தாவரங்களும் அழிவடைகின்றது. காற்றாலைகளின் அதிர்வு காரணமாக மீன்கள் பிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மீன்களின் இனப்பெருக்கமும் இடம்பெறாது.
இப்பிரச்சனைத் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இப் பிரச்சனையை தீர்த்து தருவதாக கூறி இருந்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை” என்றார்.
தொடர்ந்து இவ் ஊடக சந்திப்பில் பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பரிமளா கருத்து தெரிவிக்கையில்,
“சமுர்த்தி இடை நிறுத்தும் செயற்பாடு நடைபெற்று வருவதாகவும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்”
தொடர்ச்சியாக இவ் ஊடக சந்திப்பில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாச தலைவர்
யோசப் பிரான்சித் கருத்துத் தெரிவிக்கையில்,
“மீனவர்கள் தொடர்ந்து துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர். ஏழு நாட்களில் மூன்று நாட்களை இந்தியன் ரோலர் பறிக்கிறது.
ஆழ்கடலில் தொழில் செய்வதற்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் மானிய முறையில் எரிபொருளை வழங்க கடற்றொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு அரசாங்கம் சட்டங்களை நடைமுறைப்படுத்தி படகுகளை அரசுடைமையாக்க வேண்டும்” என்றார்.