ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 3,400 க்கும் மேற்பட்டோர் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் 20 விசேட பொலிஸ் குழுக்கள் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதற்கமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் மறைமுக உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.