நிதி தாக்கம் குறித்த முறையான, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகள் ஏதுமின்றியே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் VAT வரியை 18 வீதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
VAT வரி உயர்வால் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளதாகவும், முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும்,அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
VAT வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயம் என்றும்,இதனால் சீனி,பருப்பு,மிளகாய்,கீரி சம்பா,சம்பா போன்றவற்றின் விலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை சந்தைக்குச் சென்று ஆராய்ந்து பார்க்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.