இந்த ஆண்டு நீர்வெறுப்பு நோயால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர்வெறுப்பு நோய் பற்றிய மக்கள் அறியாமையாலேயே இவ்வாறான மரணங்கள் பதிவாவதாக அதன் சமூக வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீர்வெறுப்பு நோயால் ஏற்படும் மரணங்களுக்கு விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம்.
முந்ததைய ஆண்டை விட கடந்த ஆண்டு, இறந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு, ஏற்கனவே 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.
சிகிச்சைகள் முறையாக பெறப்படாமையே இந்த மரணங்களுக்கு காரணமாகும். தற்போது, இலங்கையில் உள்ள சுமார் 300 அரச வைத்தியசாலைகள் நீர்வெறுப்பு நோய் தடுப்பு மருந்தை வழங்குகின்றன.
கடுமையான கடி ஏற்பட்டால், அது தொடர்பான தடுப்பூசியும் சுமார் 100 மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது.
இது இலவசமாக வழங்கப்படுகிறது. நாம் செய்ய வேண்டியது விலங்கு கடிக்கு உள்ளானால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.”
இது பொதுவாக நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட விலங்கு கடி மூலம் பரவுகிறது. அல்லது நீர்வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு எமக்கு ஏற்பட்டுள்ள காயத்தை நக்கினாலும் இந்த நோய் ஏற்படுகிறது.
மேலும், இது காயம் இல்லாமல் கண்கள், மூக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள சளி சவ்வுகள் மூலம் இது உறிஞ்சப்படுகிறது. பொதுவாக, இந்த வைரஸ் உடலில் நுழைந்து அறிகுறிகள் தோன்றும் நேரம் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் ஆகும்.
விலங்கு கடித்த ஒருவருக்கு நீர்வெறுப்பு நோய் தடுப்பூசியை பெறவில்லையாயின் இன்னும் ஒரு வாரமோ, இரண்டு வாரமோ என்று நினைக்காமல் மூன்று மாதங்கள் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்” என்றார்.