கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்படவுள்ளது எனவும் இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைக்கின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
20 லட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
அதன்படி நேற்று முற்பகல் குருநாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும்.
தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம்-என்றார்.