பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக இன்று (08) முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
1700 ரூபாய் சம்பளத்தை பொறுத்தவரைக்கும், கட்டாயம் பெற்று கொடுப்போம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால் இதில் இருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், இன்றைக்கு இளைஞர்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பெருந்தோட்ட சமூகத்தினரை பற்றி அறியாத நபர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் நினைக்கிறார்கள் இன்றைக்கு இந்த 1700 ரூபாய் சம்பளமானது மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொண்டு வராது என்று. ஆனால், நிறைய பேருக்கு புரியாத விடயம் கொரோனாவுக்கு முன்னால் வறுமையின் விழுக்காற்றானது பெருந்தோட்ட சமூகத்துக்கு மத்தியில் 23% சதவீதமாக இருந்தது, இன்றைக்கு அது 52% சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் சொன்னதை கட்டாயம் செய்வோம். இன்றைக்கு அரசாங்கமாக இருக்கட்டும், தொழிற்சங்கங்களாக இருக்கட்டும் அனைவருமே முழு முயற்சியுடன் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.
மக்களும் இதற்கு ஆதரவு அளிக்கிறார்கள். 1700 ரூபாய் வர்த்தமானி வெளியிடும் போது சில தொழிற்சங்கங்கள் நாங்களும் பெற்றுக் கொடுத்தோம் என பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
அப்படி பெயர் தான் போட வேண்டும் என்றால் எனக்கு அது பற்றி பிரச்சனை இல்லை, தயவுசெய்து பெயர் போட்டுக்கலாம். ஆனால், மக்களுக்கு கட்டாயம் ஒற்றுமையாக, உறுதுணையாக நின்றாக வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்.
இதில் வந்து அரசியல் விளையாடுவது ஒரு மிகப்பெரிய தவறு. அதே நேரத்தில், இந்த நீதிமன்ற உத்தரவு வரும்போது சில தொழிற்சங்க தலைவர்களும், அரசியல் தலைவர்களும் சந்தோஷப்பட்டார்கள். இந்த மாதிரி நாங்கள் இருந்தால் நமக்குள்ளே பிரிவினை இருந்தால் இந்த மக்களை முன்னால் கொண்டு போக முடியாது. என்னை பொறுத்த வரைக்கும், நான் இந்த நாள் கூலி சம்பளம் முறைமையை எதிர்க்கின்றேன்.
ஒரு மாற்று முறைமை தேவை. ஆனால், அந்த மாற்று முறைமை வரும் வரைக்கும் ஒரு நியாயமான சம்பளம், வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பளம் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும் இன்றில் இருந்து மக்கள் அவர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுவார்கள். அதாவது ஒவ்வொரு தோட்டத்திலும் வெளிக்காட்டுவார்கள்.
அவர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.