மியன்மாரின் மியாவாடியில் உள்ள இணைய மோசடி மையங்களில் தொழில் நிர்ப்பந்தங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டு எல்லைப்பகுதி ஊடாக தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாசினி பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.
மியன்மார் மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கையின் இடைவிடாத ஈடுபாட்டின் விளைவாகவே இந்த விடுதலை சாத்தியமானது என்று தூதுவர் கூறியுள்ளார்.
எனினும், எஞ்சியுள்ளவர்களின் நிலை மற்றும் குறித்த 20 பேர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்கள் என்ற தகவலை தூதுவர் இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக இவர்கள், பல்வேறு தொழில் உத்தரவாதங்களுக்கு மத்தியில் சென்ற நிலையிலேயே இணையக்குற்றங்களில் ஈடுபடுவோரால் தடுத்து வைக்கப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.