புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொலை செய்த
இருவர் கைது!
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் இரண்டு நாள்களுக்கு முன் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்று இரவு ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்தி கைக்கோடாரி மற்றும் அதனை காணொளி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிருக வதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.