சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் மற்றும் காணி உத்தியோகத்தர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன
இது தொடர்பில் நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இதில் எந்தவிதமான உண்மை தன்மைகளும் இல்லை இது தொடர்பில் பிரதேச செயலகதுடன் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பில் அறிந்து கொள்ளமுடியும்
அடாத்தாக அளவுக்கதிகமான காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்டவர்களின் காணிப் பிணக்குகள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் அவர்களே இவ்வாறான விசமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள்
வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மற்றும் பொருத்தமற்ற முறையிலே காணிஆவணங்களை பெற்றுள்ளவர்கள் இவ்வாறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் ஆலோசித்து வருகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.