தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட கடிதம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி ஆணையாளர் எம்.எல்.ஏ. சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தெரிவித்த அவர், “ஒருநாள் சேவையின் ஊடாக தென் மாகாண காரியாலயத்தில் 300 தேசிய அடையாள அட்டைகள் நாள்தோறும் விநியோகிக்கப்படுகின்றது.
நாட்டின் எந்தவொரு பாகத்தில் வசிப்பவரும் இதற்காக விண்ணப்பம் அனுப்ப முடியும்.
சாதாரண சேவையின் ஊடாக வருடமொன்றுக்கு 40000 முதல் 45000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 26696 அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு வழங்கப்பட முடியாதவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக விசேட கடிதமொன்று வழங்கப்பட உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.