பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு நலன்கருதி, எம்.பி. ஒருவர் இரு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னரும் இரு துப்பாக்கிகளை உடைமையாக வைத்திருக்க முடியுமென்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக சிறிய பிஸ்ரல்களை பயன்படுத்தும் முறை வரலாற்று ரீதியாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கமைய, அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த பிஸ்ரல்கள் இருக்கின்றன. அதற்கான அனுமதியும் இருக்கிறது. ஆனால், நான் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் ஏற்பட்ட போராட்ட சூழ்நிலையும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களும் நாட்டின் வரலாற்றில் கடும் இருண்ட காலப் பகுதியாக பார்க்கப்படுகிறது.
சட்டத்துறையில் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கி சமூகமாக ஒன்றிணைந்து கொலை செய்தார்கள். சட்டத்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் 72 பேரின் இல்லங்களை தீக்கிரையாக்கி ஜனாதிபதியின் நூலகத்தை முழுமையாக அழிவுக்குட்படுத்தியது மாத்திரமல்லாமல் ஜனநாயகத்தின் முக்கிய தூணாக கருதப்படும் பாராளுமன்றத்தை முழுமையாக தீக்கிரையாக்கி அராஜக நிலைமையை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதுபோன்ற அராஜக நிலைமை கடந்த காலங்களில் தொடர்ந்தும் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னரும் பணம் செலுத்தி தமது உடைமையாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் இரு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ள முடியும். விருப்பமானவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கியதன் பின்னரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்வதற்காக இதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சகல மனிதரும் கெளரவமான முறையில் உயிரிழக்க வேண்டும். சித்திரவதைப்படுத்தி கொலை செய்கிறார்கள் என்றால் உயிர் பாதுகாப்புக்காக இரு ஆயுதங்களை பெற்றுக்கொள்ள முடியும். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நீங்கியதும் அவர்களின் வீடுகளில் இரு துப்பாக்கிகளை வைத்துக்கொள்வதற்கான உரிமை தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெறும் என்றார்.