அயோத்தி ஶ்ரீ இராமர் திருக்கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கோலாகலமாக இன்று (22) இடம்பெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உத்தர பிரதேஷ் முதல்வர் யோகி ஆதித்யநாத், RSS எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் ஜீ, உத்தர பிரதேஷ் ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
சாது, சந்நியாசிகளின் மந்திர பாராயணத்துடன் பக்தர்களின் ராம மந்திர முழக்கம் வானைப் பிளக்க இன்று பகல் 12.30 அளவில் பிராண பிரதிஷ்டை விழா இனிதே இடம்பெற்றது. பிராண பிரதிஷ்டை நடைபெறும்போது ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
51 அங்குல உயரம் கொண்ட ராம் லல்லா எனப்படும் பால இராமரின் திருவுருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அயோத்தியின் பிரதிஷ்டை விழா இடம்பெற்றது. ஶ்ரீபால இராமர் சிலையின் மீது வருடாந்தம் ராம நவமியன்று சூரிய ஔி விழுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர்களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி ஜெக்கி ஷெரோஃப் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இவர்களை தவிர சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று காலை முதல் நடைபெற்ற ஶ்ரீ இராமர் பக்தி சங்கீர்த்தனத்தில் பாடகர்களான சங்கர் மகாதேவன், சோனு நிகம் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை- அயோத்தி ஶ்ரீ இராமர் திருக்கோவிலில், பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வரலாற்று சிரப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் இன்று காலை அபிசேக பூஜைகள் இடம்பெற்றன.