தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் ஐவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதில் துபாய் நாட்டைச் சேர்ந்த கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலகத் தலைவரே இதற்கு பிரதான காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னரும் கொஸ்கொட சுஜி, பீச் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேராவை கொலை செய்ய முயற்சித்திருந்தார்.
எனினும் அவர் அதில் உயிர் பிழைத்ததாகவும், அவரது வெளிநாட்டு முதலீட்டாளர் சுடப்பட்டு காயமடைந்ததாகவும் பாதாள உலகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொஸ்கொட சுஜீக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்ததாகவும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீயை இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னர் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுத்து நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த சமன் பெரேராவுக்குச் சொந்தமான டிஃபென்டர் காரில் அந்த 5 பேரும் வழக்கு ஒன்றில் பங்கேற்க வந்துள்ளனர். அந்த 5 பேரில் 3 பேர் குற்றவாளிகள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னெடுத்திருக்கலாம் என விசாரணை குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு T56 ரக துப்பாக்கிகளுடன் ஜீப்பில் வந்த இருவரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளனர் மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து 36 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொலையாளிகள் வந்த ஜீப்பில் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.