தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும் வெளிப்படுத்துவதற்கும் தமிழ் பொதுவேட்பாளரை பலப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழ்ப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியிட்டுள்ளது.
உரிமைகளுக்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம்.
மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம்.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.