சென்னை சேர் ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற நான்காவது தெற்காசிய கனிஷ்ட தடகளப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இலங்கை அணி இன்று (14) மாலை இலங்கை வரவுள்ளதாக தடகள சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாள் போட்டித் தொடரில் (செப்டம்பர் 11, 12, 13) இலங்கை அணி 09 தங்கப் பதக்கங்கள், 09 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 17 வெண்கல பதக்கங்களுடன் 35 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இலங்கையுடன் நேருக்கு நேர் போராடிய இந்தியா, 21 தங்கம், 22 வெள்ளி, 05 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 48 பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கங்களை வெல்ல முடியவில்லை.
அதே நேரத்தில் பங்களாதேஷ் (3), மாலைத்தீவு (2) மற்றும் நேபாளம் (1) ஆகிய நாடுகளால் வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
தெற்காசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) விளையாட்டு வீரர்களின் திறமையை வௌிப்படுத்தும் வகையில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.