இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் பாராட்டுக்குரியது. ஆனால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின்படி செயற்படாவிட்டால் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று (14) முற்பகல் நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இன்னும் 3 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்கிற்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அனுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை எனவும் குறிப்பிட்டார்.