ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என்ற இரண்டு புதிய மாதுளை வகைகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு புதிய வகை மாதுளைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த இரண்டு சமீபத்திய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. ஒரு வருடத்திற்கு ஒவ்வொரு மரத்திலிருந்தும் 20-25 கிலோ மாதுளை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு மொத்தம் 400 மரங்கள் நடுவதன் மூலம் ஆண்டு வருமானம் ஒரு ஏக்கருக்கு 8 மில்லியன் ரூபா என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த இரண்டு வகை மாதுளைகளும் உலர் வலயத்தில் செய்கைக்கு ஏற்றது, மேலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக இந்த வகைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் எமது நாட்டில் மாதுளை இறக்குமதி செலவை குறைக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, இந்த நாட்டிற்குள் விளைவிக்கக்கூடிய விவசாய பயிர்களை மேலும் இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் ஏற்றுமதி பயிர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துமாறு விவசாய திணைக்களத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.