இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், பெற்றோரின் மூட நம்பிக்கையால் பலியான சோகம் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் – ஹரித்வாரில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரை கங்கை நதியில் 5 நிமிடம் குளிக்கவைத்தால், அவரது நோய் குணமடையும் என்ற மூட நம்பிக்கையால், சிறுவன் ஹரித்வாருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். நடுங்கும் குளிர் காலத்தில், 5 வயது சிறுவனை கங்கை நதிக்குள் 5 நிமிடம் மூழ்க வைத்திருக்கிறார்கள்.
சிறுவனின் பெற்றோருடன் சென்றிருந்த உறவினர் பெண் சிறுவனை கங்கையில் மூழ்கவைக்க, அப்போது சில மந்திரங்களை பெற்றோர் உச்சரித்துள்ளனர்.
கங்கையிலிருந்து வெளியே வரும் போது சிறுவன் நோயிலிருந்து குணமடைந்து விடுவான் என்று நினைத்த பெற்றோருக்கு, அவன் சடலமாக வந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் மேலே இழுக்கும்படி கோரியும் பெற்றோர் அவனைக் காப்பாற்றவில்லை. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு, பெற்றோரை தள்ளிவிட்டு சிறுவனை மேலே எடுத்த போது, சிறுவன் உயிரற்ற சடலமாகத்தான் மேலே வந்துள்ளான்.
இந்த நிகழ்வை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். உடன் வந்த உறவினப் பெண், பொதுமக்களை தாக்கி சிறுவனை மீண்டும் ஆற்றில் மூழ்கடிக்க முயலும் காட்சியும் பதிவாகியுள்ளது.
உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வசித்து வந்த குறித்த சிறுவனின் பெற்றோரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுவனுக்கு டெல்லியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாகவும், கங்கையில் குளித்தால் நோய் தீரும் என்ற தங்களது நம்பிக்கையால் இங்கே அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.
சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் பெற்றோர் மற்றும் உறவினப் பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.