பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றைய தினம் (29.01.2024) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் இவர்கள் நேற்றைய தினம் (28.01.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி சமனலவெவ பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் கற்கை பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கைதாகியுள்ளனர்.
கைதானவர்கள் மொரவக்க, ருக்கஹவில, அளுத்தரம, இமதுவ மற்றும் கித்தலவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.