முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மனு தொடர்பான அடிப்படை சமர்ப்பணங்களை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், சமூக செயற்பாட்டாளர் ஒஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.