நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்னவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுர முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முன்னாள் ஏ.எஸ்.பி.க்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது நடாதடதப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அவராலேயே திட்டமிடப்பட்டு ஏ.எஸ்.பி மஹாநாமாவின் ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டதாக இந்த வருட ஆரம்பத்தில் தெரியவந்துள்ளது.
பிரேமரத்னவின் இல்லத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது தனிப்பட்ட வாகனம் மீது இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
செப்டம்பர் 17, 2023 அன்று, முன்னாள் எம்.பி., தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தனது வீட்டை நோக்கி நடந்து சென்ற சிறிது நேரத்தில் குறித்த துப்பாக்கிச் சூடு நடந்தது.
ஏ.எஸ்.பி.யின் உதவியுடன் பிரேமரத்ன சம்பவத்தை ஒழுங்கமைத்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.