தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் கடிதத்தில் மக்களை ஏமாற்றும் விடயங்கள் _சிறீதரன்!
தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் 13 ம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
13 ம் திருத்தச் சட்டத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்க் கட்சிகளால் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையிலான விடயங்கள் அதில் உள்ளது. தெளிவாகவும் குறிப்பிடப் படவில்லை. 13 தொடர்பில் நாம் இந்தியாவை வலியுறுத்தவேண்டிய தேவை இல்லை.
இந்தியப் பிரதமரே கூட்டுச் சமஸ்டி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தி.மு க தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சட்டமன்றதில் தீர்மானம் கொண்டுவந்திருந்தார்.
இவ்வளவும் நடந்த பின்பும் நாம் 13 ம் திருத்தச் சட்டத்தை வலியுறுத்துவது காலத்திற்கு பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.