பாடகி பவதாரிணியின் பூதவுடல் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் பூதவுடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது பூதவுடல் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பவதாரிணியின் பூதவுடல் இன்று (26) நள்ளிரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, இறுதிக்கிரியைகள் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மறைந்த பின்னணிப் பாடகி பவதாரிணி, கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47 ஆவது வயதில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 7.30 அளவில் காலமானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் மறைந்த பவதாரிணியின் பூதவுடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று மாலை இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பவதாரிணியின் பூதவுடல் சென்னை தியாகராய நகரிலுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான இவர், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரியாவார்.
மறைந்த பவதாரிணி, ராசய்யா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாரதி’ திரைப்படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ எனும் பாடலுக்காக தேசிய விருது பெற்றதோடு, மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் பாடியுள்ளார். காற்றில் வரும் கீதமே, ஔியிலே தெரிவது, தென்றல் வரும், போன்றவை அவருடைய தனித்துவம் மிக்க குரலுடன் வௌியான சில பாடல்களாகும்.
‘மித்ர் மை பிரண்ட்’ , பிர் மிலேங்கே ஆகிய ஹிந்திப் படங்களுக்கும் தமிழில் இலக்கணம், அமிர்தம் உட்பட சில திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். இதேவேளை, பவதாரிணியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தமது ஆழ்ந்த இரங்கலை வௌியிட்டு வருகின்றனர்.