ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடை கொடுத்து விட்டு புதிய ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்
மோசமான நிலையில் நாடு உள்ளது. இந்நிலையில் புதிய அரசொன்றை அமைக்க நாம் திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகிறோம். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவுக்கு இன்று நடந்தது நாளை எமக்கும் நடக்கலாம். எதற்கும் தயாராகவே நாம் உள்ளோம்.
அரசை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை எனவும் நீங்களும் ஜனாதிபதியாக இருந்தவர் தானே என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். எனது தலைமையிலான அரசு மாறுபட்டது. எமது ஆட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்பட்டது. ஊழல் வாதிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.
இந்த அரசு கொண்டுவந்த 20வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 19வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், அப்போது தான் சர்வதேச உதவிகள் கிடைக்கும் என தெரிவித்தார்.