இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையுடனான நீண்டகால ஒத்துழைப்பின் விளைவாக பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானம் ஒன்றே இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் 2022 இன் பிற்பகுதியில் நிறைவு செய்யப்பட்ட நிலையில் ரேடார் மற்றும் கெமராக்கள் போன்ற கடல் உந்துவிசை சென்சார் உள்ளிட்ட கூடுதல் மேம்படுத்தல்களுடன் 2024 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இது கடல்சார் கண்காணிப்பு , பேரிடர் பதிலை மேம்படுத்துவதற்கும் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் இலங்கையின் திறன்களை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த நன்கொடையில், விமானம் மற்றும் ஆதரவு சேவைகளும் உள்ளடங்குவதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பயிற்சி மற்றும் ஒத்திகைக்குப் பிறகு இந்த ஆண்டு இறுதியில் விமானம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வந்தடைந்த பின்னர், இரத்மலானை விமானப்படை தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு பின்னர் திருகோணமலை சீன துறைமுகத்தில் உள்ள 3வது கடல்சார் பயணப் படையில் இணைக்கப்படும்.