கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை மோசடி மூலம் அபகரித்த வைத்தியர் வேடமணிந்த தாதியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் பொலன்னறுவையைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகையை பறி கொடுத்த பெண்ணின் தாயார் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் நோயாளியை பார்க்க வந்துள்ளனர்.
அதன்போது, நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர் போல் காட்சியளித்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் தாயின் பதிவுகளை சரிபார்த்து, அவரின் உடல்நிலைக்கு ஏற்ப இரத்தம் வழங்க வேண்டும் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேக நபர் இந்த இரண்டு பெண்களில் ஒருவரிடமிருந்து இரத்தம் எடுக்க வேண்டும் என கூறி அவரில் ஒருவரை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று ஸ்கான் செய்ய வேண்டும் எனவும் அனைத்து நகைகளையும் கழற்றச் சொன்னதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது தங்க நகைகளை தனது சகோதரிக்கு கொடுக்க விரும்புவதாக அந்தப் பெண் கூறியபோது, சந்தேக நபர் அவரது சகோதரி விடுதிக்கு வெளியே இருப்பதாகக் குறிக்கும் ஓடியோ பதிவை போலியாக வெளியிட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரின் கூற்றை நம்பி பெண் தனது தங்க நகைகளை அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார், பின்னர், சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதையடுத்து சந்தேகநபர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதுடன் மருதானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த காலங்களிலும் வைத்தியர் போன்று நடித்து இவ்வாறான மோசடிகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.