வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் இன்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்காவெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்.
அநுரவிற்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.