மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரம் அரசியலமைப்பில் இருந்தாலும் 8 ஜனாதிபதிகளால் நிறைவேற்ற முடியாத ஒன்றை நான் நிறைவேற்றுவேன் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க முடியாதுள்ளதாக பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் 13 வது திருத்தத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது. அத்தோடு வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என தெற்கில் நீங்கள் கூறியமை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு அதுதானா என எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரோ ஒரு இளம் வயது வேட்பாளர் நான் தான்.
ஜனாதிபதி தேர்தலில் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொடுப்போம் என என்னோடு போட்டியிடுகின்ற வயது முதிர்ந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.
அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நான் வழங்கி வடக்கு மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. இலங்கை ஜனாதிபதிகள் வரலாற்றில் எட்டு ஜனாதிபதிகள் ஆட்சி செய்து உள்ள நிலையில் எவராலும் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை.
எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் பல வருட காலமாக நடைபெறாமல் இருந்த மாகாண சபை தேர்தலை நடத்தியமை வரவேற்கத்தக்க விடயம். அதன் பின் பல வருடங்கள் ஆகியும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆட்சியாளர்களால் முடியவில்லை.
மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போவதாக கூறினார்கள் இறுதியில் அது நடைபெறாமலே முடிந்தது.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
தமிழ் மக்களின் கலாச்சாரம் மொழி தொடர்பில் மதிக்கும் அதேவேளை அந்த மக்களின் அபிவிருத்தி தொடர்பில் என்னால் இயன்றவரை திட்டங்களை நிறைவேற்றுவேன்.
தாளையாடி நீர் விநியோகத் திட்டம் கூட எனது தந்தையார் ஆட்சி காலத்தில் திட்டம் வகுக்கபபட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.அதேபோல் பலாலி விமான நிலைய அபிவருத்தி தொடர்பிலும் ராஜபக்ச ஆட்சியில் அடித்தளம் இடப்பட்டு தற்போது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே அரசியலுக்காக 13 ஐ பயன்படுத்துவது தவறான விடையமாகப் பார்க்கும் அதேவேளை பதின்மூன்றை தருவோம் என வயதான ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறுவதைப் போன்று என்னால் கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.