எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக விசேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டையை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடையவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வாக்களிப்பு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
இந்த அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம் சுபியான் தலைமையில் நடைபெற்ற விசேட தேவையுடையோருக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜெ முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி மற்றும் சமூக மாவட்ட சமூக சேவை அதிகாரி உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
விசேட தேவையுடையவர்கள் இந்த அடையாள அட்டையினூடாக சிரமமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.