தாயின் அனுமதியுடன் மூவரால் சிறுமி துஷ்பிரயோகம்!
தாயின் அனுமதியுடன் மூவரால் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பதுளை ஹாலிஎல பகுதியில் நிகழ்ந்துள்ளது.
வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமியை பரிசோதித்த போது சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தாயின் அனுமதியுடன் மூவரால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
முதலாவது சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதான நபர் எனவும் இரண்டாவது சந்தேகநபர் ஏழு வயதில் பிள்ளை உள்ள 41 வயதான நபர் எனவும் மூன்றாவது சந்தேகநபர் ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த தாயாரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.