நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை (20) முதல் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கான அறிவித்தலை வௌியிட்டு வளிமண்டலவியம் திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது,
வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாகாண மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழையுடனான வானிலையால் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலி எல பிரதேச செயலக பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனே யட்டிநுவர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, பலாங்கொடை, நிவித்திகல, இம்புல்பே மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.