ஹாலி எல ரொசெட் தோட்டத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மடுல்சீம, உலக முடிவு பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று , அவரை தாக்கி கொலை செய்து சடலத்தை உலக முடிவில் இருந்து பள்ளத்திற்கு வீசிய சம்பவம் தொடர்பில் , மடுல்சீம, படாவத்தையை சேர்ந்த 34 வயதுடைய சந்திரபோஸ் தயாளன் என்ற நபர் திங்கட்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலி எல ரொசெட் தோட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய விவேகானந்தன் சுஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன், சந்தேக நபரின் முச்சக்கரவண்டியை, 350,000 ரூபாய் பணம் செலுத்தி,ஒரு தவணைக்கு 13,000 ரூபாய் என்ற அடிப்படையில் 36 தவணைகளில் பணத்தை செலுத்த குத்தகை (லீசிங்) முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ,மடுல்சீம பட்டாவத்தையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதுடன், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த தோட்டத்தில் வசிக்கும் இன்னொரு நபருடன் சேர்ந்து மாணிக்ககற்கள் மற்றும் தங்க பொருட்களை விற்பனை செய்ய போவதாக கூறி முச்சக்கரவண்டி சாரதியையும் அழைத்துள்ளார்.
மடுல்சீம நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேக நபரும் அவரது நண்பனும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர், சிறிய உலக முடிவுக்கு செல்லும் பாதைக்கு அருகிலுள்ள காட்டில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை மறைத்து வைத்திருப்பதாக கூறி முச்சக்கர வண்டி சாரதியை அழைத்துச் சென்று அவரை தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.