வவுனியாவில் கணவன்– மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா பன்றிபண்ணை குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 2012ஆம் ஆண்டு வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவர்களது வீட்டில் பணிபுரிந்த சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
இருவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொல்லப்பட்டவரின் மகள், பொலிஸார், நிபுணத்துவ சாட்சிகள் மற்றும் எதிரிகளின் சாட்சியங்கள் நிறைவடைந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர்களில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமின்றி கொலைக்குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.
அதன்படி அவருக்கு முதல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாவது குற்றத்துக்கு இரட்டை தூக்கு தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
இதேவேளை, இரண்டாவது எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.