தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தயா மாஸ்டர் இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தார். இவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்தல் விதிகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் 2018ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.தயா மாஸ்டர் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகினார்.
குறித்த வழக்கில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அவர் தனது குற்றத்தினை ஏற்றுக் கொண்டதையடுத்து ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.