காத்தான்குடியில் பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்!
பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய நண்பிகளான 14 வயதுடைய இரு சிறுமிகளை கொழும்பு செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாக திருகோணமலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இரு நாட்களாக அடைத்து வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு காத்தான்குடி பகுதியில் நள்ளிரவில் இறக்கிவிட்டு சென்ற தனியார் பஸ் நடத்துனர் மற்றும் அதன் சாரதி ஆகிய இருவரை இன்று (5) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுமிகளை அவர்களது பெற்றோர் தொடர்ச்சியாக ஏசியும் திட்டியும் வருவதன் காரணமாக அவர்களின் தொல்லை தாங்க முடியாது வீட்டை விட்டு கொழும்பு பகுதிக்கு சென்று தங்கி வாழ வேண்டும் என குறித்த சிறுமிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிறுமிகள் இருவரும் சம்பவ தினமான கடந்த 2ம் திகதி புதன்கிழமை காலையில் பாடசாலை செல்வதாக வீட்டை விட்டு வெளியேறி, பாடசாலைக்கு செல்லாமல் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பஸ் வண்டி ஒன்றின் மூலம் நகருக்கு சென்று, அந்த பகுதியிலுள்ள ஓர் இடத்தில் தமது பாடசாலை உடைகளை மாற்றிவிட்டு பஸ்தரிப்பு நிலையத்தில் கொழும்பு செல்வதற்காக காத்திருந்தனர்.
இதன்போது, அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ், மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்த நிலையில், அந்த பஸ் வண்டியில் ஓட்டமாவடி சென்று அங்கிருந்து கொழும்பிற்கு செல்ல முடியும் என இரு சிறுமிகளும் திருகோணமலை பஸ்ஸில் ஏறி, ஓட்டுமாவடி செல்வதற்காக பணத்தை வழங்கி பயணச் சீட்டை பெற்றுக் கொண்டனர்.
குறித்த பஸ் வாகரை பிரதேசத்தை சென்றடைந்த நிலையில் நித்திரையில் இருந்த இரு சிறுமிகளிடம் நடத்துனர் சென்று ஓட்டுமாவடிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு இறங்காமல் இருந்துள்ளீரகள். தற்போது வாகரைக்கு வந்துள்ளீர்கள் என கேட்டபோது தாங்கள் கொழும்புக்கு போவதற்காக வந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து,
நடத்துனர் திருகோணமலை சென்று அங்கிருந்து ரயிலில் செல்ல முடியும். நான் ரயிலில் ஏற்றி விடுவதாக தெரிவித்து அவர்களை திருகோணமலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
திருகோணமலையை சென்றடைந்ததும் இரு சிறுமிகளையும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, ரயில் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்று விட்டது. இனி கொழும்புக்கு பஸ் வண்டியும் இல்லை காலையில் தான், எனவே அதுவரைக்கும் இருவரையும் அறை ஒன்றில் தங்க வைத்து அனுப்புவதாக தெரிவித்து
இருவருக்கும் ஹோட்டலில் இரு அறைகளை எடுத்து அந்த சிறுமிகளுடன் நடத்துனரும் சாரதியும் தங்கியிருந்து, அவர்களை இரு தினங்கள் பாலியல் துஸ்பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இரு சிறுமிகளையும் திருகோணமலையில் இருந்து நேற்று (04) இரவு 10 மணிக்கு காத்தான்குடிக்கு அழைத்து வந்து விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதையடுத்து,
சிறுமிகள் என்ன செய்வது என தெரியாது வீடுகளுக்கு திரும்பி சென்ற போது தமக்கு எற்பட்ட பரிதாப நிலையை தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனை தொடர்ந்து திருகோணமலை மற்றும் கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 27 வயதுடைய நடத்துனர் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் கைது செய்ததுடன்
இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு பயன்படுத்திய தனியார் பஸ்ஸையும் மீட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.