தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
பார்வையாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கியுள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுத்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவரது மரண விசாரணை நேற்று முன்தினம் (08) கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த மாணவியின் தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.