மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 – 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்து சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்கவுக்கு மிண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி ரி20 போட்டியில் அறிமுகமான சமிந்து விக்ரமசிங்க அப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரண, நுவன் துஷார, துடுப்பாடட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடைக்காலப் பயிற்றுநராக இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய சனத் ஜயசூரிய, முழு நேரப் பயிற்றுநராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.
இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும். அப் போட்டிகள் அக்டோபர் 13, 15, 17ஆம் திகதிகளில் இரவு போட்டிகளாக நடத்தப்படும்.