இலங்கையின் முனைவர் மாணவரான அஜ்மல் அப்துல் அஸீஸ், 2024ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா-விக்டோரியன் சர்வதேச கல்வி விருதுகளின் ஆராய்ச்சி பிரிவில் இறுதிப் போட்டியாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்புகள் தொடர்பான அவரது ஆராய்ச்சி, செவித்திறன் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவியளிப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், உலகின் முதல் ஹைப்ரிட் கோக்லியர் உள்வைப்பை உருவாக்கியுள்ள அஜ்மல் அப்துல் அஜீஸ் தனது விருது குறித்து கருத்து தெரிவிக்கையில், இது உண்மையிலேயே தமக்கு சிறந்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அங்கீகாரம் கிடைத்தபோது, தம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்றரை வருட கற்கையின்போது, எதனை செய்துவிட்டோம் என்று கேட்பதை விட, இதனை செய்துவிட்டோம் என்ற உணர்வு தமக்கு திருப்தியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி கற்க இலங்கையிலிருந்து பயணம் செய்து பயோனிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த அஸீஸ், 1978 முதல் மாறாமல் இருந்த கோக்லியர் இம்ப்லான்ட்டை மாற்றியமைத்துள்ளார்.
கோக்லியர் உள்வைப்பு என்பது ஒரு சிறிய, சிக்கலான மின்னணு சாதனம் ஆகும். இது காது கேளாத அல்லது கடுமையாக இரைச்சல் உணர்வை கொண்ட ஒருவருக்கு சிறந்த ஒலி உணர்வை வழங்க உதவுகிறது. தற்போது செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில், இது தொடர்பில் முன் மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
இதேவேளை, கோக்லியர் உள்வைப்புகள் மக்களுக்கு கேட்கும் திறனை தருகிறது எனினும் அது மின்சாரத்தில் இயங்குகிறது.
எனினும், அதனை ஒளியை பயன்படுத்தி இயங்கச் செய்வதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருவதாக அஜ்மல் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் செவிப்புலன் அற்றவர்களாக உள்ளனர். அவர்கள் மத்தியில் தமது ஆராய்ச்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் அஜ்மல் கூறியுள்ளார்.