மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைகின்றது. இதனால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வடக்கில் தொடரும் கனமழையால் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 632 குடும்பங்களைச் சேர்ந்த 2,245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 404 குடும்பங்களைச் சேர்ந்த 1,495 நபர்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 நபர்களும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்களும், மடு பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது 4 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான நிவாரண வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
தற்போது அருவி ஆற்றின் நீர்மட்டம் உயர்வாக காணப்படுகின்ற மையினால் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் காரணத்தினாலும் ஆற்று வெள்ளம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானத்துடனும், விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வாறான அனர்த்த நிலை ஏற்படுமாக இருந்தால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தோடும், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.
தற்போது மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் குஞ்சுக்குளம் ஊடாக பாயும் நீர் மாட்டம் ஒரு அடி இருக்கும் மையினால் குஞ்சுக்குளம் செல்லும் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பாதையூடாக பயணம் செய்யும் மக்கள் அவதானத்துடன் செல்ல வேண்டும்.ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு அமைவாக பிரயாணங்கள் பாதுகாப்புடன் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.