அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர், அபி பின்கெனவர் இலங்கை மற்றும் நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அபி பின்கெனவர் இலங்கை மற்றும் நேபாளத்திற்கான விஜயத்தை மேற்கொள்கின்றார்.
அபி பின்கெனவரின் விஜயமானது, தெற்காசிய இளையோர் தலைவர்களை ஊக்குவிப்பதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை உணர்த்துவதோடு, குடியுரிமை பங்கேற்பு மற்றும் இளையோரின் தலைமைத்துவம், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் சமூக நெகிழ்வுத்தன்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்த ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இலங்கையில், அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையின் கூட்டுறவின் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் குடியுரிமை பங்கேற்பு போன்ற துறைகளில் இளம் தலைவர்களை ஊக்குவிக்கும் திட்டங்களின் தாக்கத்தை சிறப்பு தூதர் பின்கெனவர் இந்த விஜயந்தின் போது அவதானிப்பார்.
அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் விசேட தூதர் பின்கெனவர் ஆகியோர் இணைந்து அமெரிக்க தூதரகத்தின் இளையோர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஆதரவிலான எமெர்ஜிங் லீடர்ஸ் அகாடமியின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார்கள்.
மேலும், படைப்புத்துறைகளில் இளம் பெண்களை ஊக்குவிக்கும் ‘விமென் இன் மோஷன்’ திட்டத்தின் மூலம் உருவான இளம் பெண்களுடனும் கலந்துரையாடி, அமெரிக்காவின் திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள் மூலம் வெற்றிகரமாக செயல்படும் இளம் தொழில்முனைவோரின் வெற்றிகளைப் பாராட்டுவார்.
இதேவேளை, நேபாளத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் சிறப்பு தூதர் அபி பின்கெனவர், அங்கு இளம் அரசியல் தலைவர்களையும், அமெரிக்க உதவியுடன் நடைபெற்ற பரிமாற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் மாணவர்களையும் சந்தித்து இளையோர் தலைமைத்துவத்தில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்தாலோசிப்பார்.
அத்துடன் நேபாளத்தில், சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துபவர்களுடன் இணைய அச்சுறுத்துல் மற்றும் தவறான தகவல்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய வட்டமேசை மாநாடொன்றிலும் கலந்துகொள்வார்.
மேலும், அமெரிக்க இளையோர் மன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டு கொள்கை முன்னுரிமைகள் குறித்தும், அவர்களது புது தேர்தல் திட்டத்தைப் பார்வையிடுவார்.
தெற்காசிய இளையோர் தலைவர்களுடன் கூட்டுறவை அதிகரித்து, உலகளாவிய இளையோர் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலக இளையோர் பிரச்சினைகளுக்கான சிறப்பு தூதர் அபி பின்கெனவரின் விஜயத்தின் நோக்கமாகும்.