பொதுத்தேர்தலுக்கான சகல பணிகளும் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளன. தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுங்கள். வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு செல்லுங்கள்.
தேர்தல் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் அதிகவளான வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்துக்கான வாக்குப் பெட்டிகள் உட்பட வாக்களிப்புக்கான இதர பொருட்கள் கொழும்பு ரோயல் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்கா கல்லூரிகளில் இருந்து நேற்று காலை சகல வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல் சகல தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்குப்பெட்டிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பாதுகாப்பு தரப்பினரது முழுமையான ஒத்துழைப்புடன் பொதுத்தேர்தலுக்கான சகல பணிகளும் திட்டமிட்ட வகையில் சிறந்த முறையில் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிமுதல் பி.ப 4 மணிவரை வாக்களிப்பு நடைபெறும். தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுங்கள்.
வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அட்டை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு செல்லுங்கள். வாக்காளர் அட்டையில்லாதவர்கள் வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலைய உத்தியோகஸ்த்தர்களுக்கும், வாக்காளர்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆகவே வாக்காளர் அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் தவறாமல் வாக்காளர் அட்டையை கொண்டுச் செல்ல வேண்டும்.
தாமதமில்லாமல் வாக்களிக்கச் செல்லுங்கள். வாக்களித்ததன் பின்னர் வீட்டில் இருங்கள். சிறந்த முறையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டத்துக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் அமைய செயற்படுவது சிவில் பிரஜைகளின் பொறுப்பாகும். ஆணைக்குழு வெளியிடும் உத்தியோகபூர்வ முடிவுகள் மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றார்.