ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்ற இலங்கையுடனான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அமேலியா கேர் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்ளை வெளிப்படுத்தியதன் பலனாக நியூஸிலாந்து மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் உலகக் கிண்ண அரை இறுதி தகுதியைப் பெறுவதற்கான வாய்ப்பை நியூஸிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டது.
பந்துவீச்சில் 2 விக்கெட்களைக் கைப்பற்றிய அமேலியா கேர் துடுப்பாட்டத்திலும் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று நியூஸிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தார்.
ஆனால், ஆட்டநாயகி விருதை அரைச் சதம் குவித்த ஜோர்ஜியா ப்ளிம்மருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 116 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சுசி பேட்ஸ் (17), ஜோர்ஜியா ப்ளிம்மர் ஆகிய இருவரும் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து ப்ளிம்ஃமர், அமேலியா கேர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
ஜோர்ஜியா ப்ளிம்மர் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (95 – 2 விக்.)
அதன் பின்னர் அமேலியா கேர் (34 ஆ.இ.), அணித் தலைவி சொஃபி டிவைன் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்கடையும் சச்சினி நிசன்சலா 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
நடப்பு உலகக் கிண்ணத்தில் இந்தப் போட்டியிலேயே இலங்கை முதல் தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது.
அணித் தலைவி சமரி அத்தபத்து முதல் தடவையாக திறமையாகத் துடுப்பெடுத்தாடி 35 ஒட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட ஹர்ஷித்தா சமரவிக்ரம 18 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் அமா காஞ்சனா ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அமேலியா கேர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லீ கஸ்பெரெக் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வியுடன் 9ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை தனது நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்ற அணியாக வெறுங்கையுடன் நாடு திரும்பவுள்ளது.
அத்துடன் இதுவரை விளையாடிய 9 உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் இலங்கை முதல் சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.