நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பாக வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கும் தகவல்களை 24 மணிநேரமும் கண்காணிப்பதற்காக, மூன்று தனித்தனி புலனாய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் புலனாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உடனடியாக தகவல்களை அனுப்பி, அந்த அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுப்பதுவே, இந்தக் குழுக்களின் பொறுப்பாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் வழங்கிய அறிக்கைகள் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் தலைவர்கள் இந்த புதிய பொறிமுறைக்கான பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சுற்றுலாப் பகுதிகளில் இஸ்ரேலியர்களைத் தாக்கும் திட்டம் தொடர்பான தகவலை, இந்திய உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்டது. இந்த தகவல் வெளியானதையடுத்து, சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க அரசு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தாக்குதல் திட்டம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய ஏனையோரை கைது செய்ய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகளில் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணர உளவுத்துறை அதிகாரிகள் குழுக்கள் இந்த நாட்களில் செயற்பட்டு வருகின்றன.
இதேவேளை, நாட்டின் சுற்றுலா பகுதிகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.