இந்தியாவின் பெங்களூரு, கோரமங்களம் உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 13ஆவது ஆசிய வலைபபந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் ஹொங் கொங்கை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் இலங்கை மிக இலகுவாக 71 – 47 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.
இதன் மூலம் தோல்வி அடையாத அணியாக ஆசிய வலைபந்தாட்ட சம்பியனைத் தீர்மானி;க்கு இறுதிப் போட்டியில் மற்றொரு முன்னாள் சம்பியன் சிங்கப்பூரை நாளை இரவு எதிர்த்தாடவுள்ளது.
ஹொங் கொங்குக்கு எதிராக இன்று சனிக்கிழமை (26) மாலை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மிகத் திறமையாக விளையாடி வெற்றிபெற்றது.
முதல் மூன்று கால் மணி நேர ஆட்டப் பகுதிகளில் அபாரமாக விளையாடிய இலங்கை கடைசி ஆட்டப் பகுதியில் கோட்டை விட்டது.
போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியை 18 – 9 என தனதாக்கிக் கொண்ட இலங்கை, இரண்டாவது பகுதியில் மேலும் சிறப்பாக விளையாடி அப் பகுதியை 18 – 12 என தனதாக்கிக்கொண்டு இடைவேளையின்போது 36 – 21 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது ஆட்ட நேர பகுதியில் எதிரணியைத் திணறவைக்கும் வகையில் விளையாடிய இலங்கை அப் பகுதியை 21 – 9 என இலகுவாக தனதாக்கிக் கொண்டது.
எவ்வாறாயினும் கடைசி ஆட்ட நேர பகுதியில் வீராங்கனைகளின் நிலைகளை மாற்றியவாறு விளையாடிய இலங்கை சில தவறுகளை இழைத்ததால் அப் பகுதியை ஹோங் கொங் 17 – 14 என கைப்பற்றியது.
எனினும், ஒட்டுமொத்த நிலையில் 71 – 47 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இலங்கை சார்பாக திசலா அல்கம 57 முயற்சிகளில் 54 கோல்களையும் ரஷ்மி பெரேரா 22 முயற்சிகளில் 17 கோல்களையும் போட்டனர்.
சிங்கப்பூர் வெற்றி
ஓரளவு சமமாக மோதிக்கொள்ளப்பட்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மலேசியாவை 54 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட சிங்கப்பூர் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெற்றது.
அப் போட்டியில் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளை முறையே 16 – 10, 17 – 8 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக்கொண்ட சிங்கப்பூர், இடைவேளையின்போது 33 – 18 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும் இடைவேளைக்குப் பின்னர் எதிர்நீச்சல் போட்ட மலேசியா அடுத்த இரண்டு ஆட்ட நேர பகுதிகளை முறையே 14 – 10, 14 – 11 என தனதாக்கியது.
எனினும் ஒட்டுமொத்த நிலையில் 54 – 46 என்ற கோல்கள் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.