ஆறு வருடங்களுக்கு முன்பு 22 வயதான தாய் மற்றும் 3 மாதங்களே ஆன பச்சிளம் பாலகனை கொன்று எரித்த கயவனான காதலன் . கொலைச் சம்பவத்தின் வெளிவராத மறுபக்கம்!
*உயிரிழந்தவர்*
பரமேஸ்வரன் சஜிந்திகா
23.10.1993
கோண்டாவில்
கோண்டாவில் இந்துமகா வித்தியாலயத்தில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்தர கல்வியை இடைநிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் வேலை செய்துள்ளார்.
காதல்
2014ம் ஆண்டு புகையிரதப் பாதை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த போது புனரமைப்பு வேலைக்கென வந்தவர்கள் சிலர் சஜிந்திகாவின் அயல் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர். இங்கு தங்கியிருந்தவர்களில் பரமேஸ்வரன் மனோராஜ்(23.10.1992) எனும் 10 ம் ஒழுங்கை கோயில் புதுக்குளம் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் தங்கி வேலை செய்துவந்துள்ளார். இங்கு தங்கி இருந்தவர்களும் சஜிந்திகாவின் குடும்பத்தினரும் ஒரே கிணற்றை பயன்படுத்தி வந்த நிலையில் சஜிந்திகாவிற்கும் மனோராஜிற்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்குமான அறிமுகம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் வேலைக்கென வந்து தங்கியிருந்தவர்கள் பணிமுடித்து தமது ஊருக்கு திரும்பியுள்ளனர். சஜிந்திகா மற்றும் மனோராஜ் இருவருக்குமிடையிலான திருமணத்திற்கு முந்திய உறவால் சஜிந்திகா கற்பமாகியுள்ளார். வீட்டாருக்கு தெரியவர முதல் காதலனை சந்திப்பதற்காக வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு செல்லப்போவதாகக் கூறி நன்பி ஒருவருடன் வவுனியா சென்று காதலனைத் தொடர்புகொண்டு விடயத்தைக்கூற அவன் திருமணத்திற்கு மறுக்க வேறு வழியின்றி வீட்டிற்கு திரும்பிய சஜிந்திகா தாயாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
சஜிந்திகா கற்பமாக இருப்பது அயலிற்குத் தெரியவர அயலவர்கள் வசைபாடத் தொடங்கினர். மகளின் வாழ்க்கை இப்படி மோசமாகிவிட்டதே என்ற துயரம் ஒருபுறம் அயலவர்களின் வசைபாடல்கள் ஒரு புறம் குடும்பத்தாரை நோகடிக்க அயலின் வசைபாடல்களால் மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிடுவாரோ என்ற அச்சம் காரணமாக கிளிநொச்சியில் உள்ள ‘நந்தவனம்’ பெண்கள் காப்பகத்தில் உரிய நடைமுறைகளுடன் சேர்த்துள்ளனர்.05.02. 2015 சஜிந்திகாவிற்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஆண் பிள்ளை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ‘பொபிசனன்’ என பெயரிட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
கைக்குழந்தையுடன் தந்தையையும் துணைக்கு அழைத்துக்கொண்டு காதலன் வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. சகோதரி ஒருவரே இருந்துள்ளார். விடயத்தைக் கூறி காதலனது பாக் எங்கே எனக் கேட்டு பாக்கினுள் இருந்து ‘பாஸ்போட்’ போட்டோக் கொப்பி பிரதி ஒன்றை எடுத்துள்ளார். அவர்களது வீட்டிலிருந்து நேராக வவுனியா பொலிஸ் நிலையம் சென்று பெண்கள் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர்.
முறைப்பாடு செய்து இரண்டாவது நாள் தொலைபேசியில் தொடர்புகொண்ட காதலன் மனோராஜ் “நாளை பிள்ளையோடு வவுனியா பொலிஸ் நிலையம் வருமாறும் அம்மா அப்பாவும் வருவினம் நான் உன்னையும் பிள்ளையையும் ஏற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மறுநாள் கைக்குழந்தையோடு தாயாரையும் அழைத்துக்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கே காதலன் தனது பெற்றோருடன் இருந்துள்ளார். இவர்களைக் கண்டதும் ஓடிவந்த காதலனின் தாயார் “எனது மகனின் பிள்ளை” எனக் கூறி குழந்தையைத் தூக்கி வைத்திருந்துள்ளார்.
இரு தரப்பினரையும் விசாரித்த பொலிஸார் எழுத்து எழுதிவிட்டு எழுத்துக் கொப்பி கொண்டுவருமாறு கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் எழுத்து எழுதுவதாக சஜிந்திகாவின் தாயார் கூற ஒரே மகன் எங்கள் வீட்டில் வைத்து எழுத வேண்டும் பெரிதாகச் செய்ய வேண்டும் என காதலனின் தாயார் கூறியுள்ளார்.”எழுத்து எழுதிவிட்டு மருமகள் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் மகளுக்கு திருமணம் முடித்து அனுப்பிவிட்டு மருமகளை கூப்பிட்டு எடுக்கிறேன்” என காதலனின் தாயார் சஜிந்திகாவின் தாயாரிடம் கூறியுள்ளார். பிள்ளையின் பிறப்பு பதிவில் தந்தை கையொப்பம் இட வேண்டும் கிளிநொச்சிக்கு கையெழுத்து வைக்க வாருங்கள் என சஜிந்திகாவின் தாயார் அழைத்து வந்துள்ளார். மாலை ஆகியதால் அலுவலகம் பூட்டியிருந்தது. பின்னர் வந்து கையெழுத்திடுகிறேன். நீங்கள் வீட்டிற்கு போங்கோ நான் வவுனியாக்கு போட்டு பிறகு வாறன் என கூறி அவர் வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல சஜிந்திகா தாயாரோடு யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இதன் பின்னர் மூன்று நான்கு தடவைகள் சஜிந்திகாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இக் காலப்பகுதியில் வவுனியா- யாழ்ப்பாணம் தனியார் பேரூந்தில் நடத்துனராக வேலை செய்து வந்துள்ளார். எழுத்து எழுதுவதற்குரிய ஏற்பாடுகள் நடப்பதாக நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.பிள்ளையின் பிறப்பு பத்திரத்தில் கையொப்பம் வைப்பதை விட எழுத்தே முக்கியமானது என லாவகமாகப் பேசி பிள்ளையின் பிறப்பு பதிவில் கையொப்பமிடுவதை தவிர்த்துள்ளார். காதலன் எனும் நயவஞ்சகனின் கபடத்தனம் புரியாது தனது வாழ்க்கை சந்தோஷமானதாகவும் அயலவர்களின் வசைபாடல்களிற்கு முற்றுப்புள்ளியாகவும் பதிவுத் திருமண நாள் இருக்கப்போகிறது என சந்தோஷத்தில் மிதந்துள்ளார் சஜிந்திகா.
**இறுதிப் பயணம்
09.08.2015 மதியம் 1.30 மணியளவில் எழுத்து எழுதுவதற்கென சஜிந்திகாவை அழைத்துச் செல்லப்போவதாக வீட்டிற்கு வந்துள்ளார் காதலன். முதல் நாளே எழுத்து எழுதுவதற்காக நாளைக்கு வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறியிருந்ததால் தயாராகவே இருந்துள்ளனர் சஜிந்திகா வீட்டார். வழக்கமாக வந்தால் உணவருந்திச் செல்பவர் அன்று சாப்பாடு வேண்டாம் என மறுத்தவர் தேசிக்காய் கரைத்த தண்ணீரையும் அருந்தாமல் 2.30 மணியளவில் வவுனியாவிற்கு புறப்பட்டுள்ளார் சஜிந்திகா.
இது தான் தனது இறுதிப் பயணம் இனி பெற்றோர் சகோதரரைக் காண மாட்டேன் என்றோ வாழ்வாவதற்காக அல்ல கொல்வதற்காகவே அழைத்துச் செல்கிறான் என்பதை அறியாது மகிழ்ச்சியுடன் வீட்டிலிருந்து புறப்பட்டார் தனது கைக் குழந்தையுடன்.
சஜிந்திகாவின் சகோதரி பருவமடைந்திருந்ததால் வீட்டாரால் சஜிந்திகாவோடு செல்ல முடியவில்லை.
சஜிந்திகா போகும் போது வீட்டார் தமது கைத்தொலைபேசியை கொடுத்து விட்டுள்ளனர். இரவு 7.30 மணியளவில் சஜிந்திகா வீட்டாரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது சஜிந்திகாவின் சகோதரி உரையாடியுள்ளார்.
“நாங்கள் வவுனியா ரவுணுக்கு வந்திட்டம் வீட்ட போய் எடுக்கிறன் எனக்கூற சாப்பிட்டியளோ என சகோதரி கேட்க “இல்லை இடியப்பம் வேண்டிக்கொண்டு போகப் போறன்” எனக் கூறியுள்ளார் சஜிந்திகா. இதுதான் சஜிந்திகா வீட்டாருடன் இறுதியாகக் கதைத்தது.
*சுத்துமாத்து
இரண்டாவது நாள் தொலைபேசியில் தொடர்புகொண்ட சஜிந்திகாவின் காதலன் “எழுத்து எழுதீற்றம் நாங்கள் கொழும்பு போறம் பிறகு எடுக்கிறம்” எனக் கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
மறுநாள் தொடர்பு கொண்டபோது “உங்கட மகளுக்கு உங்களைப் பார்க்கவோ கதைக்கவோ விருப்பம் இல்லையாம்” எனக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாங்கள் எப்படியாவது மகளைப் பார்க்க வேண்டும் கதைக்க விருப்பம் இல்லா விட்டாலும் எட்ட நின்றாவது பிள்ளையைப் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளனர்.
பிள்ளை அழுகிறது என ஒரு பிள்ளை அழும் சத்தத்தையும் தொலைபேசியில் கேட்கக் கூடியவாறு செய்துள்ளார். நீங்கள் இடையில் கதைக்கக் கூடாது உங்கட மகள்கதைக்கிற சத்தத்தை கேளுங்க எனக் கூற பெண் ஒருவர் தூர நின்று இவருடன் உரையாடுவது போன்ற சத்தத்தையும் கேட்கக் கூடியவாறு செய்துள்ளார்.
தாயார் பிள்ளையைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த அழுத்கம வருமாறு கூறியுள்ளார். மறு நாள் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு அழுத்கம சென்றுள்ளார் சஜிந்திகாவின் தாயார். பஸ்ஸில் பயணிக்கும் போது தொலைபேசியில் உரையாடி அழுத்கம சந்தியில் இறங்குங்கள் எனக் கூறிய சஜிந்திகாவின் காதலனது தொலைபேசி அழுத்கம சந்தியில் இறங்கி தொடர்பு எடுத்தபோது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சிலரின் உதவியோடு ஒருவரது வீட்டில் தங்கி நின்ற போது இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு “குழுச் சண்டை ஒன்று நிகழ்ந்ததாகவும் அவ்வழியால் வந்ததால் பொலிஸார் தன்னையும் பிடித்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் காலை தொடர்பு கொள்வதாகவும் கூறியுள்ளார். மறுநாள் காலை தொடர்புகொண்டபோது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் தொடர்பு இல்லாததால் வேறு வழியின்றி வீடு திரும்பியுள்ளார்.
மறுநாள் சஜிந்திகாவின் தந்தை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போது பொலிஸார் சஜிந்திகாவின் காதலனைத் தொடர்புகொண்டபோது “அழுத்கமவிலிருந்து உடன் வரமுடியாது” எனக் கூற பொலீஸாரும் நீங்கள் வீட்ட போங்கோ அவன் வந்ததும் கூப்பிடுறம் என தெரிவித்துள்ளனர். பின்னர் தந்தை வவுனியாவில் உள்ள அவனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விடயத்தைக் கூற “நீங்கள் ஏன் அழுத்கம போனீர்கள். எனக்கு சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேன். ஏன் கவலைப்படுறியள் எப்ப எண்டாலும் வருவினம் தானே” என அவனின் தாயார் கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டவன்
” குடும்பமாக பருத்தித்துறை பஸ்ஸில வந்துகொண்டிருக்கிறம் நீங்கள் எடுக்காதையுங்கோ தேத்தண்ணி குடிக்க எங்காவது பஸ்ஸ நிப்பாட்டுவாங்கள் அப்ப எடுக்கிறன்” எனக் கூறியுள்ளார்.அதன் பின்னர் அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று முறையிட அவனது தாயாரை அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர். இதன் போது தனது பிள்ளையையும் காணவில்லை என அவனின் தாயார் கூறியுள்ளார்.
சஜிந்திகாவின் காதலனது பெற்றோர் முன்பு முருகனூர் எனும் இடத்தில் இருந்தூஆகவும் அங்கே அவர்களிற்கு வீடு ஒன்று இருப்பதாகவும் சிலர் தெரிவித்ததைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற போது புற்கள் மண்டி பயன்பாட்டில் இல்லாத வீடொன்றை அப்பகுதியினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
குறித்த வீட்டின் கேற் மூடப்பட்டிருந்ததால் வளவிற்குள் செல்லாது அயலில் விசாரித்த போது அண்மையில் யாரும் வந்து குடியேறவில்லை எனும் தகவலை தெரிவித்துள்ளனர். சஜிந்திகாவின் புகைப்படத்தைக் காட்டி விசாரித்த போதும் இவ்வாறு ஒருவரை தாம் இப்பகுதியில் காணவில்லை என்றே தெரிவித்துள்ளனர். பின்னர் அவனின் வீட்டிற்கு வந்து முரண்பட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.
சஜிந்திகாவின் காதலன் மோகன்ராஜ் அரபு நாடு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து வவுனியா பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டு அவனது பாஸ்போர்ட் பிரதியை கொடுத்த போது அவன் வெளிநாடு சென்றதை உறுதிப்படுத்தினர்.
தந்தையாரை அழைத்து விசாரித்த போது 14 நாட்களில் நாட்டிற்கு வரவழைத்து பொலிஸ் நிலையம் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
*கிளிநொச்சியில் இறங்கிவிட்டாள்
அரபு நாட்டில் இருந்து திரும்பி வந்ததும் பொலிஸ் நிலையம் அழைக்கப்ப்பட்டு சஜிந்திகாவின் பெற்றோரையும் வவுனியா பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். அங்கு சென்ற போது அவனைக் கண்டதும் “மகள் எங்கே என ” கதறி அழுதபோது என்னோடு வரும் வழியில் கிளிநொச்சியில் இறங்கிவிட்டார். முன்னர் இருந்த பெண்கள் இல்லத்திற்கு செல்வதற்காகவே கிளிநொச்சியில் இறங்கினார். எனக்கு வேறெதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார். உங்கள் மகள் வேறு யாரையாவது திருமணம் செய்து சென்றிருப்பாள் என அவனின் தாய் கூறியுள்ளார்.
வீட்டிலிருந்து அழைத்துச்செல்ல முற்பட்ட போது ‘எழுத்து எழுதுவதற்காக அழைத்துச் செல்கிறேன் என கடிதம் ஒன்றை சஜிந்திகா எழுத சஜிந்திகாவின் காதலன் கையொப்பம் இட்டுள்ளார். அந்த கடிதத்தை பொலிஸாரிடம் காட்டிய போது அவன் இது என்னுடைய கையெழுத்து இல்லை என மறுத்துள்ளார்.
இதன் போது இவரை மறியலில் வைத்து விசாரிக்கப் போகிறோம் நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என சஜிந்திகாவின் பெற்றோரிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் அன்றைய தினமே தடுத்து வைக்காமல் விடுவித்துள்ளனர்.
திரும்பவும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்ற போது அவனை கோப்பாய் பொலிஸ் நிலையம் அனுப்புவதாகவும் அங்கு விசாரிப்பார்கள் எனவும் கூறியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அவனது தந்தை மற்றுமொருவருடன் வந்த போது சஜிந்திகாவின் தந்தை அவனது காலில் விழுந்து மகள் எங்கே எனக் கேட்டு அழுதுள்ளார். இரண்டு கிழமையில் உங்கள் மகளை ஒப்படைக்கிறேன் என அவனின் தந்தை கூறிச் சென்றுள்ளார்.
*அலைச்சல்
பொலிஸ் நிலையமும் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகமும் என ஆறு வருடமாக மாறி மாறி அலைந்து திரிந்துள்ளனர். ஆரம்பத்தில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போது “மகள் வவுனியாவில் காணாமல் போனதால் வவுனியா பொலிஸார் தான் விசாரிக்க வேண்டும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு வருடமாக வவுனியா பொலிஸ் நிலையம் செல்வதும் வீட்டினரை அழைத்து விசாரிப்பதும் வீட்ட போங்கோ திரும்ப கூப்பிடுகிறோம் என கூறி அலைச்சலை ஏற்படுத்தியுள்ளனேரே தவிர அவனைக் கைது செய்யவோ உரிய விசாரணைகளை முன்னெடுக்கவோ இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. “நாங்களும் தேடுறம் நீங்களும் தேடுங்கோ” எனும் பதிலே வவுனியா பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை*
தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக மகளைக் காணாத நிலையிலும் தொடர்ந்து அலைச்சல் மட்டுமே உரிய பதில் பொலிஸாராலோ பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினரால் கிடைக்காத நிலையில் கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமை அலுவலகத்தில் உள்ள “அம்பிகா” எனும் உயர் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். CID யினரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூறுகிறோம் எனக்கூறி யுள்ளார்.
01.02.2019 வவுனியாவில் உள்ள குற்றத் தடுப்பு புலனாய்வுப் பொலீஸாரால் குடும்பத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டனர்.
சஜிந்திகாவிற்கு பெற்றோர் கொடுத்தனுப்பிய தொலைபேசிக்கு அழைப்புகளை ஏற்படுத்தியவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சஜிந்திகாவின் உறவினர்களும் தொடர்ந்து அழைப்பை ஏற்படுத்திப் பார்த்ததால் அவர்களும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் ஒரு நாள்
“போண் ஒன்று கிடைத்திருக்கிறது உங்களது மகளினதா என உறுதிப்படுத்துங்கள்”என வவுனியாவில் உள்ள CID அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது அத்தொலைபேசி சஜிந்திகாவிற்கு பெற்றோர் கொடுத்த தொலைபேசியே தான். அதனை உறுதிப்படுத்தினர்.
மூன்றாவது கைமாறிய நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அவரது நன்பர் ஒருவரிடம் “பொலிஸாரால் பிரச்சினை இல்லை மனித உரிமை ஆணைக்குழுவில தான் கேஸ் இருக்கு. அதுவும் கொஞ்ச நாளில் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
*காதலனான கொலை காரணின் வாக்குமூலம்
வவுனியாவிலுருந்து வரும்போது மதுபானம் வாங்கி வந்தேன். முருகனூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தேன். இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு பட்டபோது குழந்தை கீழே விழுந்து மயங்கிவிட்டது. சஜிந்திகாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். மண்ணெண்ணை சீனி தென்னம் மட்டை போட்டு வீட்டில் வைத்து எரித்தேன்.எரிந்துகொண்டிருந்த போது மயக்கமடைந்திருந்த குழந்தையை சிவன் கோயிலில் விடுவோம் என கொண்டு சென்றேன். தூக்கிச் செல்லும் போது பிள்ளையை கோயிலில் விடுவதால் பின்னர் மாட்டிக் கொள்வேன் என சிந்தித்து பிள்ளையைத் திருப்பிக் கொண்டுவந்து சஜிந்திகாவின் உடல் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் குழந்தையைப் போட்டு எரித்தேன். மயக்க நிலையிலேயே குழந்தையையும் போட்டு எரித்தேன். எரிந்து முடிந்ததும் எஞ்சியவற்றை வீட்டின் தோட்டக் காணியில் புதைத்தேன் எனக் கூறியுள்ளார்.
அவளுடன் வாழ விருப்பமில்லை. கரைசல் தந்ததால் கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு முடிவெடுத்தே அழைத்துவந்தேன் எனவும் சஜிந்திகாவை வீட்டிலிருந்து அழைத்து வந்த அன்றைய தினம் எட்டு தொடக்கம் ஒன்பது மணிக்குள் கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
*சந்தேகம்
1, பயன்படுத்தாது இருந்த வீட்டில் மண்ணெண்ணெய் சீனி வாங்கி வைத்திருந்தது யார். சந்தேக நபர் தான் முன்னரே வாங்கி வைத்திருந்தாரா. அல்லது வேறு யாராவது இவற்றை ஏற்பாடு செய்தனரா.ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்து சந்தேக நபருடன் சேர்ந்து கொலை செய்தனரா?
2, சந்தேக நபரின் பெற்றோர் அழைத்து வந்த சஜிந்திகாவும் பிள்ளையும் எங்கே என தமது மகனை கேட்கவில்லையா?
4, சந்தேக நபர் கட்டார் சென்றதாக கூறப்படுகிறது. அப்படியாயின் பொலிஸ் நற்சான்றிதழ் தேவை. தாய், மகன் காணாமல் போன குற்றச்சாட்டு உள்ள நிலையில் பொலிஸார் நற்சான்றிதழ் வழங்கியது எவ்வாறு?
5, அழைத்து வந்த தாயும் மகளும் காணாமல் போன நிலையில் நான்கு வருடமாக சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன்? குற்றத்தடுப்பு புலனாய்வுப் பொலிஸாரால் இரண்டு வருடங்களில் சந்தேக நபரை கைது செய்ய முடிந்த நிலையில் வவுனியா பொலிஸாரால் விசாரணைகளில் சிறு முன்னேற்றம் கூட காண முடியாதது ஏன்?
6, குழந்தை அழும் குரலும் பெண் ஒருவர் உரையாடும் குரலும் யாருடையது? பெற்றோரை ஏமாற்றுவதற்கு சந்தேக நபரிற்கு உதவிய அந்தப் பெண் யார்?
7, வவுனியாவில் இருந்து முருகனூரில் உள்ள வீட்டிற்கு இரவு நேரத்தில் பேரூந்து சேவை இல்லை. சஜிந்திகா மற்றும் பிள்ளையை எவ்வாறு அழைத்துச் சென்றார். அல்லது யாருடைய உதவியில் அழைத்துச் சென்றார்.
8, சந்தேக நபர் கொலை செய்ய முயற்சிக்கும் போதோ குழந்தை கீழே விழுந்த போதோ சஜிந்திகா சத்தமிட்டிருப்பார். வேறு நபர்களின் உதவியுடன் கொலை நிகழ்ந்திருக்குமா?
சந்தேக நபரிற்கு இரண்டு பெண் சகோதரிகள் எனவும் மூத்த சகோதரி திருமணம் முடித்து கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.